கலந்துரையாடல் மற்றும் ஆலோசணை வழங்கும் பிரிவு

சென்னைப் பெருநகர்ப் பகுதியில் பொதுமக்கள் மனை அல்லது கட்டிடம் வாங்குமுன் கவனிக்க வேண்டியவை பற்றிய தகவல்கள் வழங்க மற்றும் திட்ட அனுமதி தொடர்பான விதிகள் பற்றிய விளக்கங்கள் அளித்து பொதுமக்களுக்கு உதவி செய்திட சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் கலந்துரையாடல் மற்றும் ஆலோசனைகள் வழங்கும் மையம், செயல்பட்டு வருகின்றது.

ஆர்வம் கொண்டுள்ள நிலத்தின் வளர்ச்சி தொடர்பான விவரங்களைத் தெரிந்து கொள்ள, அந்நிலத்தின் நில அளவை எண், பகுதி எண், ஊர் / கிராமம் மற்றும், வட்டத்தின் பெயர் போன்ற அடிப்படையான தகவல்களைத் தெரிவித்தால், முழுமைத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட நில உபயோக பிரிவு பற்றிய தகவல்கள் மற்றும் நில ஆர்ஜிதம் பற்றிய தகவல்களை, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் ஆவணங்களிலுள்ள விவரங்களின்படி பொது மக்களுக்குத் தெரிவிக்கப்படுகின்றன. தவிர முழுமைத் திட்டம் அல்லது விரிவான வளர்ச்சித் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட சாலை விரிவாக்கம் / கடலோர ஒழுங்குமுறைப் பகுதி, நீர் பிடிப்புப் பகுதி, செங்குன்றம் நீர்பிடிப்புப் பகுதி போன்ற தனிச் சிறப்புப் பகுதிகளில் தமது நிலம் / மனை உள்ளனவா என்ற சந்தேகங்களுக்கான விளக்கங்களும் எழுத்து மூலமாக இம்மையத்திலேயே உடனடியாக பெறலாம்.

இப்பிரிவில் உள்ள அலுவலர்கள் தகவல் வேண்டுவோரிடம் கலந்துரையாடி அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளைக் கனிவுடன் வழங்குகிறார்கள். மேலும் மையத்தில் கீழ்காணும் விண்ணப்பப் படிவங்கள் மற்றும் கையேடுகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன.

  1. வளர்ச்சிக் கட்டுப்பாடு விதிகளின் புத்தகம்.

  2. விதிகள் தொடர்பான அலுவலக உபயோகத்திற்கு பிறப்பிக்கப்பட்ட பொது உத்தரவு மற்றும் சுற்றறிக்கைகள் அடங்கிய கையேடு.

  3. அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களின் – அச்சுப் பிரதி.

  4. "குடிமக்கள் சாசனம்" – கையேடு.

  5. விண்ணப்படிவம் "அ" – மனைப்பிரிவுகள் திட்ட அனுமதிக்காக.

  6. விண்ணப்ப படிவம் "ஆ" – கட்டிடங்களின் திட்ட அனுமதிக்காக.

  7. படிவம் "இ" – விண்ணப்பதாரர் மற்றும் நில உரிமையாளரின் பொறுப்புறுதி மொழிச் சான்று.

  8. கட்டிடம் கட்ட திட்ட அனுமதி கோரும் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் பற்றிய விபரங்களைக் கொண்ட சரிபார்ப்பு பட்டியலின் படிவம்.

  9. மனைப் பிரிவின் திட்ட அனுமதி விண்ணப்பித்திற்காக இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் பற்றிய விபரங்களைக் கொண்ட சரிபார்ப்பு பட்டியலின் படிவம்.

  10. நில உபயோக மாற்றம் கோரும் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் பற்றிய விபரங்களைக் கொண்ட சரிபார்ப்பு பட்டியலின் படிவம்.

  11. இரண்டாவது முழுமைத் திட்டத்தின்படி சென்னைப் பெருநகரப் பகுதியில் அமைந்துள்ள கிராமங்களின் நில உபயோக மண்டல வரைபடம்.