மொத்த உணவு தானிய அங்காடி அபிவிருத்தி திட்டம்
ஏற்கனவே திட்டமிட்டபடி சென்னை மையப்பகுதியில் உள்ள நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கோயம்பேடு அங்காடி வளாகத்தில் 500 கடைகள் கொண்ட மொத்த உணவு தானிய அங்காடியை ரூ.61.85 கோடி செலவில் 15.60 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைக்க சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமமும், அரசும் நிர்வாக ஒப்புதல் கொடுத்துள்ளது, அதற்கான ஆணையை தமிழ்நாடு அரசு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மூலமாக, அரசு ஆணை எண் எம்.எஸ் 212, நாள் 20.6.2005 தேதியின்படி வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் வியாபாரிகள் சங்கங்களுடன் கலந்தாய்வு செய்து அதன் பிறகு அவர்களுடைய கருத்திற்கிணங்க பல மாற்று வடிவமைப்புகள் தயார் செய்யப்பட்டது.
கோயம்பேடு மொத்த விற்பனை அழுகும் பொருள் அங்காடி வளாகத்தின் ஒரு பகுதியும், உத்தேசிக்கப்பட்டுள்ள உணவு தானிய அங்காடி செயல் திட்டப் பகுதியில் ஒரு பெரிய நிலப் பரப்பும் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக கேட்கப்பட்டுள்ளது. எனவே மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் உத்தேசித்துள்ள ரயில் நிலைய டெப்போ அமையும் இடம் பற்றிய விரிவான தகவல் பெறப்பட்டதும் மீதமுள்ள இடத்தில் உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி அமைக்க குழுமம் திட்டமிட்டுள்ளது.