மாதவரம் கனரக ஊர்தி முனையம்

Madhavaram Truck Terminal

வணிகம் மற்றம் பொருளாதாரம் ஆகியவைகளை ஊக்குவித்து மத்திய வணிக மாவட்டத்தை பரவலாக்க சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மாதவரத்தில் ரூபாய் 6 கோடி செலவில் 80 ஏக்கர் நிலப்பரப்பில் கனரக ஊர்தி முனையத்தை அபிவிருத்தி செய்தது. இந்த முனையம் உள்வட்டச்சாலை மற்றும் வடக்கு தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில், சென்னை நகரம், துறைமுகம் மற்றும் இருப்பு பாதை நிலையங்களை எளிதில் அடையும் வகையில் அமைந்துள்ளது. 1992 ஆம் ஆண்டிலிருந்து இந்த முனையம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் நோக்கம் நவீன மற்றும் செயல்திறன் மிக்க கனரக ஊர்தி முனையத்தை நகரத்திற்கு வழங்கி அதன் பலன் போக்குவரத்தாளருக்கும், சுமை ஊர்தி முகவர்களுக்கும், பொதுமக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதாகும்.

பண்டக சாலை, பொருள்கள் ஏற்றும் / இறக்கும் பகுதி, வாகன பழுதுபார்க்கும் இடங்கள், சீர்மையான வாகன நிறுத்துமிடம், அலுவலகக் கட்டிடம் மேலும் இதர வசதிகள் மற்றும் சேவைகளை தங்குதடையில்லாமல், போக்குவரத்தாளர்களுக்கு அவர்கள் தேவைக்கேற்ப வழங்கும் வகையில் இத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வாகன பழுதுபார்க்கும் பணி, நிர்வாக கட்டிடம், மின் துணைநிலையம், தீயணைப்பு நிலையம், அஞ்சல் நிலையம், காவல் நிலையம், பெட்ரோல் விற்பனை மையம், சேமிப்பு கிடங்கு, கனரக ஊர்தி நிறுத்துமிடம், தொலைபேசி இணைப்பகம், எடைமேடை மற்றும் இதர உபயோகங்களுக்கும் வழிவகை செய்து பல்வேறு அளவுகளில் மனைகளை (220 ச.மீ முதல் 880 ச.மீ பரப்பளவு வரை) கனரக ஊர்தி இயக்குபவர்கள் மற்றும் முகவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.