மறைமலைநகர்

மறைமலைநகர் என்ற புதுநகரம் முதலாவது முழுமை திட்டத்தின் பரிந்துரையின் ஒரு பகுதியாக செ.பெ.வ.குழுமத்தால் உருவாக்கப்பட்டது. இந்த புதுநகரானது சென்னையிலிருந்து 45 கீ.மீ. தொலைவில் ஒரு முழுமையான துணை நகரமாக உருப்பெற்று இருப்பதுடன் சென்னை நகருக்குள் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்தியும் வருகிறது. பட்டா நிலம் மற்றும் அரசு புறம்போக்கு நிலம் உள்பட சுமார் 3000 ஏக்கர் நிலம் இத்திட்டத்திற்காக தெரிந்தெடுக்கப்பட்டு அறிவிக்கை செய்யப்பட்டது. அதில் 1150 ஏக்கர் பட்டாநிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. மேலும் 693 ஏக்கர் வனப்பகுதி நிலமும் அபிவிருத்திக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
புதுநகர் அபிவிருத்தி திட்டமானது ஆரம்பகட்டத்தில், பல்வேறு வருவாய்ப்பிரிவினருக்கும் ஏற்ற வகையில் வேறுபாடுள்ள மக்கட் செறிவு கொண்டதாக 10 குடியிருப்பு பகுதிகளுடன் தொழிற்சாலைக்கான பகுதியையும் உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட்டது. பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு இத்திட்டம் பின்பு மாற்றியமைக்கப்பட்டு, தொழிற்சாலைகளுக்கு அதிக இடங்கள் கொடுக்க வேண்டிய அவசியத்தைக் கருத்தில் கொண்டு தொழிற்சாலைக்கான நிலங்கள் அதிக அளவில் ஒதுக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு தமிழ் நாடு அரசு மகிந்திரா ஃபோர்டு இந்தியா என்ற நிறுவனத்துடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி மோட்டார் வாகன தொழிற்சாலைக்கான நிலங்கள் ஒதுக்கப்பட்டது. 270 ஏக்கர் மொத்த விஸ்தீரணம் கொண்ட (பட்டா நிலம் மற்றும் அரசு புறம்போக்கு நிலம்) நிலம் மகிந்திரா நிறுவனத்திற்கு ஒப்படை செய்யப்பட்டது. மறைலை நகரிலேயே குடியமர மக்களை கவர்ந்து ஈர்க்கும் ஒரு கிரியா ஊக்கியாக இந்நிறுவனம் செயல்படுகின்றது.
செ.பெ.வ.குழுமம் குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைக்கான மனைப்பிரிவுகளை சுமார் 1200 ஏக்கர் நிலப்பரப்பில் அபிவிருத்தி செய்துள்ளது. தற்போது மறைமலைநகரில் 3500 வீடுகள் 80 தொழிற்சாலைகள்,100 வணிக நிறுவனங்களுடன் (சிறுகடைகள், உணவகங்கள் மற்றும் இதர கடைகள் உள்பட) 4 மருத்துவமனைகள், 4 கோவில்கள், 6 தேவாலயங்கள் 1 மசூதி, 1 நூலகம், 8 பள்ளிகள் மற்றம் 4 வங்கிகளும் அமைந்துள்ளன.