முழுமைத் திட்டம்
1971-ம் ஆண்டின் தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் 1974ம் ஆண்டு தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டது. சென்னைப் பெருநகர்ப் பகுதி 1189 ச.கி.மீ பரப்பளவு கொண்டதாகும். இதன் கீழ் சென்னை மாநகராட்சி ,16 நகராட்சிகள் , 20 பேரூராட்சிகள் மற்றும் 214 கிராமங்களை உள்ளடக்கிய 10 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
சென்னைப் பெருநகர்ப் பகுதியிலுள்ள உள்ளாட்சி நிறுவனங்களின் பட்டியலைக் காண இங்கு சொடுக்கவும்.
சட்டத்தின் கீழ் உள்ளவிதிமுறைகளின் படி சென்னைப் பெருநகரத் திட்டப் பகுதிக்கான முழுமைத் திட்டம் தயாரிப்பதே சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் முதன்மையான கடமையாகும். சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் தயாரிக்கப்பட்ட சென்னைப் பெருநகர்ப் பகுதிக்கான முழுமைத் திட்டம் 1-8-1975 தேதியிட்ட அரசாணை (எண் 1313 ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகத் துறை) யின்படி 5.8.1975 அன்று தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிடப்பட்டது; மற்றும் அன்றிலிருந்து இன்று வரை இத்திட்டம் நடைமுறையிலிருக்கிறது. முழுமைத் திட்ட (தயாரித்தல், வெளியிடுதல் மற்றும் ஒப்புதல்) விதிகளின்படி பொது மக்களின் கருத்து மற்றும் மறுப்புக்களைப் பெற அறிவிப்பு செய்யப்பட்டு பெறப்பட்ட கருத்துக்களை ஆய்வு செய்து அரசுக்கு அனுப்பப்பட்டது. அதன்பின் 4.12.1976 தேதியிட்ட அரசாணை எண் 2395-ல் (ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்துறை) முழுமைத் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்தது.
வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகள் முழுமைத் திட்டத்தின் ஒரு பகுதிப் படிவமாகும். வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகள் பல முறை மறு ஆய்வு செய்யப்பட்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பல விதமான செயல்களின் தேவைக்கேற்ப பல ஆண்டுகளில் நிகழ்ந்த மட்டு மீறிய வளர்ச்சிகளையும் கருத்தில் கொண்டு நில உபயோக வகைபாடுகளும் விரிவான ஆய்வுகளுக்கு பிறகு மாறுதல்களுக்கேற்பத் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக பூந்தமல்லி புறவழிச் சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலைகளை ஒட்டி தொழிற்சாலைப் பகுதியாகவும் ,மீஞ்சூர் மற்றும் அத்திப்பட்டுப் பகுதி, மதானந்தபுரம் மற்றும் முகலிவாக்கம் பகுதிகளை ஒட்டி குடியிருப்புப் பகுதியாகவும் நில உபயோக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சட்டப் பிரிவு 32 (4)-ன் கீழ் தனி நபர் கோரிக்கைகளிலுள்ள தகுதியின் அடிப்படையில் நில உபயோக மாற்றங்களையும் குழுமம் கருத்தில் கொள்கிறது.
முழுமைத் திட்டம் - II
முன்பு சமர்ப்பிக்கப்பட்ட இரண்டாம் முழுமைத் திட்டத்தின் வரைவு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மூலம் 30.6.95 தேதியிட்ட அரசு ஆணை எண் 598-ல் அரசு இசைவு அளித்திருந்தது. அதன் பிறகு பொது மக்களுடன் கலந்தறிந்து கருத்துக்கள் அரசுக்கு (டிசம்பர் 1995ம் வருடம்) அனுப்பப்பட்டது. உயர்நீதி மன்ற இடைக்காலத் தடை ஆணையினால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது. மேலும் 2001-ல் நீதிப் பேராணை விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது. நகர்புறத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு இரண்டாம் முழுமைத்திட்ட வரைவினைத் திருத்தங்கள் செய்து அரசுக்கு சமர்ப்பிக்குமாறு அரசு 5.10.01 தேதியிட்ட அதன் ஆணை எண் 408ல் திருப்பி அனுப்பியது பொது மக்களைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் மாற்றி அமைக்கப்பட்ட வரைவு இரண்டாவது முழுமைத் திட்டம் அரசிற்குத் திருப்பிச் சமர்ப்பிக்கப்பட்டது. இத்துறையில் மேலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளைச் சேர்த்து ஒரு புதிய இரண்டாவது முழுமைத் திட்டத்தைத் தயாரித்து தமிழ்நாடு நகர் மற்று;ம் ஊரமைப்புச் சட்டத்தின்படி அரசின் இசைவிற்கு அனுப்புமாறு ( வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை) 5-12-2006 தேதியிட்ட அரசாணை எண் 331-ல் திருப்பி அனுப்பியது. அரசின் கட்டளைப்படி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட வரைவு முழுமைத் திட்டம், அரசு நாளிதழ் அறிவிக்கையின்படி பொது மக்களின் கருத்திற்கும், ஆலோசணைக்காகவும் 12.3.2007 முதல் கொடுக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டங்கள் சென்னைப் பெருநகர் பகுதியில் 28.4.2007-தேதியிலிருந்து அடுத்த 90 நாட்களில் அனைத்து மக்களுக்கும் தெரியும் வண்ணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இரண்டாவது முழுமைத் திட்டத்தின் வரைபடம் காண இங்கு சொடுக்கவும்.