சென்னை மாநகரில் பல அடுக்கு வாகன நிறுத்த வளாகத்தின் வளர்ச்சிப் பணிகள்
வியாபார நிறுவனங்களின் அசுர வளர்ச்சி, குடியிருப்பு காலனிகள், கல்வி நிறுவனங்கள், மோட்டார் வாகனங்களை உபயோகிப்பதில் மக்களின் ஆர்வம் மற்றும் பலவகை மூல காரணங்கள் ஆகியவற்றால் சென்iயில் வாகனங்களின் தொகை அதிகமாகி விட்டது. ஆனால் சாலைகளின் நீளம் மற்றும் அகலம் ஆகியவை எவ்வித வளர்ச்சியும் இன்றி அப்படியே உள்ளதாலும், மீதியிருக்கும் சாலைகளின் பெரும்பகுதியை வாகனங்கள் நிறுத்தப்பட்டு ஆக்கிரமித்து விடுவதால், பெரும் போக்குவரத்து நெருக்கடியும் பொதுமக்களுக்கு இடைஞ்சலும் உருவாகின்றன.
இது தொடர்பாக அரசு சார்பில் செ.பெ.வ.கு / த.நா.ந.வ.நிதி (TNUDF) பிப்ரவரி 2003-ல் திருவாளர்கள். வில்பர்ஸ்மித் அஸோஸியேட்ஸ் (பி) லிமிடெட் (M/s. WSAPL) என்ற கலந்தறி நிறுவனத்தை விரிவான ஆய்வு செய்யவும் மற்றும் பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய தகுந்த ஆலோசனைகளை வழங்கவும் நியமித்தது. அதன்படி அந்நிறுவனமும் "சென்னை மாநகரில் வாகன நிறுத்த தேவையின் ஆய்வு" என்ற அறிக்கை வழங்கியது. இந்த ஆய்வில் வாகன நிறுத்த பிரச்சனையை குறைக்க பல பரிந்துரைகளை வழங்கியது. தி.நகர், பாரிமுனை, அண்ணா நகர், அடையார், அண்ணாசாலை, நுங்கம்பாக்கம் மற்றும் வேளச்சேரி போன்ற முக்கியமான இடங்களில் தெருவில் அமையாத பிரத்யேக "பல அடுக்கு வாகன நிறுத்த வளாகங்களை" அமைக்கும் திட்டத்தை பரிந்துரைத்தது.
அதையடுத்து செ.பெ.வகு. திருவாளர்கள். மிகான் லிமிடெட் என்ற கலந்தறி நிறுவனத்தை பல அடுக்கு வாகன நிறுத்தும் வளாகம் ஆறு இடங்களில் அமைய விரிவான சாத்திய அறிக்கையை வழங்க நியமித்தது. பனகல் பூங்காவில் இத்தேவை அதிகமாக உள்ளதால் இங்கு மட்டும் இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற தனியாக ஒப்பந்த ஆவணம், செலவு பற்றிய விவரங்கள் பொறியியல் வடிவமைப்பு போன்ற பணிகளை உள்ளடக்கிய விளக்கமான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம், திருவாளர்கள். மிகான் லிமிடெட் வசம் ஒப்படைத்தது.
தெரிவு செய்யப்பட்ட 6 இடங்களில், 3 இடங்களில் இத்திட்டத்தை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சி பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் பனகல் பூங்காவிற்கு அருகிலுள்ள தனது இடங்களில் இத்திட்டத்தை மேற்கொள்ள அரசு அனுமதி கொடுத்துள்ளது. தியாகராயர் பேருந்து நிலையத்தில் பல அடுக்கு வாகன நிறுத்தம் வளாகம் அமைக்க சென்னை வளர்ச்சிக் குழுமம் அரசிடம் அனுமதி கேட்டுள்ளது.