வெளி வட்டச் சாலைத் திட்டம்
சென்னைப் பெருநகரின் போக்குவத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டும், பெருநகர வளர்ச்சியை கருத்தில் கொண்டும், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் பெருநகரின் வெளி ஒரத்தில் வெளிவட்டச் சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இச்சாலையானது வண்டலூரில் தேசிய நெடுஞ்சாலை எண். 45-ஐயும், நசரத்பேட்டையில் தேசிய நெடுஞ்சாலை எண் 4-ஐயும், நெமிலிச்சேரியில் தேசிய நெடுஞ்சாலை எண் 205-ஐயும், நல்லூரில் தேசிய நெடுஞ்சாலை எண் 5-ஐயும், மீஞ்சூரில் திருவொற்றியூர்-பொன்னேரி-பஞ்செட்டி சாலையையும் இணைக்கிறது. இச்சாலையின் நீளம் 62.3 கீ.மீ. ஆகும். மேலும், இச்சாலையில், சாலை மற்றும் தொடர் வண்டி அமைப்பதற்கு 72.0 மீட்டர் அகலமும், பிற்கால அபிவிருத்திக்கு 50.00 மீட்டர் அகலமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இச்சாலை அமைக்க உத்தேசிக்கப்பட்ட தொகை ரூபாய் 850 கோடியாகும்.
இத்திட்டத்திற்காக நில எடுப்பு பணிகள் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக தேசிய நெடுஞ்சாலை எண்.45 முதல் தேசிய நெடுஞ்சாலை எண்.205 வரை உள்ள 29.5 கீ.மீ. நீளத்திற்கு 29 கிராமங்களில் நிறைவு செய்யப்பட்டு, மேற்கண்ட நிலங்கள் குழுமத்தின் பொறுப்பில் உள்ளது. இரண்டாம் கட்டமாக தேசிய நெடுஞ்சாலை எண்.205 முதல் திருவொற்றியூர்-பொன்னேரி–பஞ்செட்டி வரையுள்ள 32.8 கி.மீ நீளத்திலுள்ள 28 கிராமங்களில் நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
வெளிவட்டச் சாலையின் முதல் கட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை எண்.45 வண்டலூர் பகுதி முதல் தேசிய நெடுஞ்சாலை எண்.205 நெமிலிச்சேரி பகுதி வரையிலுள்ள 29.5 கீ.மீ. நீளத்திற்கு 6 வழிச் சாலையை ரூ. 864.22 கோடி மதிப்பீட்டில் அமைக்க அரச ஆணை எண் 32 (நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகத்துறை) நாள் 25.2.2009 -ல் அங்காரம் அளித்துள்ளது. இத்திட்டத்தின் செயலாக்கத்தை கண்காணிக்க மற்றும் ஒருங்கிணைப்பணியினை மேற்கொள்ள தமிழ் நாடு சாலை போக்குவரத்து நிறுவனத்தை இத்திட்டத்தின் மேலாண்மை இணையாளராக தமிழக அரசின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ளது.