திட்ட அனுமதி
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், 1971ம் ஆண்டின் தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்ட விதி -பிரிவு 49ன் படி, சென்னைப் பெருநகர்ப் பகுதியின் வளர்ச்சியைத் திட்ட அனுமதி வழங்குவதின் மூலமாக ஒழுங்குபடுத்துகிறது.
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், சென்னைப் பெருநகர்ப் பகுதியில் உள்ள உள்ளாட்சி நிறுவனங்களுக்குத் திட்ட அனுமதி வழங்க, தனது அதிகாரத்தைப் பகிர்ந்தளித்துள்ளது. அதன்படி, பொதுவாக அனுமதிக்கப்படும் சாதாரண வகைக் கட்டிடங்கள், தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களுக்கான கட்டிடங்கள் வணிக உபயோக மேம்பாடுகள், மனைப்பிரிவு மற்றும் சிறிய நிலப் பகுதியில் தீர்மானிக்கப்படும் மனை உட்பிரிவு ஆகிய வளர்ச்சிகளுக்கு உள்ளாட்சி மன்றங்கள் திட்ட அனுமதி வழங்கி வருகின்றன. சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம், சிறப்பு வகைக் கட்டிடங்கள், தொகுப்புக் கட்டிடங்கள் மற்றும் குழுமத்தின் சிறப்பு அதிகாரங்களின் கீழ் பரிசீலனை செய்யப்படவுள்ள கட்டிடங்களுக்குத் திட்ட அனுமதி வழங்குகிறது, மற்றும் பல அடுக்குமாடி கட்டிடங்களுக்கு அரசின் ஒப்புதலுடன் திட்ட அனுமதி வழங்கப்படுகிறது.
"பி" - பிரிவு சிறப்பு வகைக்கட்டிடங்கள் மற்றும் தொகுப்புக் கட்டிடங்களுக்கான திட்ட அனுமதி விண்ணப்பங்களை பரிசீலனை செய்கிறது.
"சி" - பிரிவு உள்ளாட்சி மன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வராத தொழிற்சாலை மற்றும் நிறுவனக் கட்டிடங்களுக்கான திட்ட அனுமதி விண்ணப்பங்கள் இங்கு பரிசீலனை செய்யப்படுகின்றன.
"மனைப்பிரிவு" பிரிவு:-
உள்ளாட்சி மன்றத்தின் அதிகார வரம்பிற்கு மிகைப்பட்ட பெரிய மனை உட்பிரிவு மற்றும் பெரிய மனைப்பிரிவுகளின் திட்ட அனுமதி விண்ணப்பங்கள் இங்கு பரிசீலனை செய்யப்படுகின்றன.
பல அடுக்குமாடி திட்ட அனுமதிப் பரிசீலனைப் பிரிவு:-
பல அடுக்கு மாடிக் கட்டிடங்களின் திட்ட அனுமதி மற்றும் தகவல் தொழிற்நுட்ப உபயோகத்திற்கான பல அடுக்கு மாடிக் கட்டிடங்களின் திட்ட அனுமதி விண்ணப்பங்களை இப்பிரிவு பரிசீலனை செய்கிறது.
திட்ட அனுமதி வழங்க, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் வகுத்து இருக்கும் வழிமுறைகள்:
முதலாவதாக கடைபிடிக்க வேண்டிய செயல்முறைகள்:-
இப்போது கட்டிடம் கட்டுவதற்கான திட்ட அனுமதி பெறுவது மிகவும் எளிதானதாகும். திட்ட அனுமதி பெறுதலில் உள்ள சங்கடம் மற்றும் கால தாமதம் ஆகியவை எல்லாம் கடந்த காலச் செய்தியாகும். இப்போதுள்ள புதிய ஒழுங்கு முறையில், நீங்கள் திட்ட அனுமதி விரைவில் பெறுவதை இக்குழுமம் உறுதி செய்துள்ளது.
திட்ட அனுமதி என்றால் என்ன?
தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின்படி சென்னைப் பெருநகர்ப் பகுதியில் எந்த வளர்ச்சியை மேற்கொள்வதாயினும் அதற்கான திட்ட அனுமதியை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திடம் முன் கூட்டியே பெற வேண்டும். இவ்வாறு பெறப்பட்ட திட்ட அனுமதி 3 வருடங்களுக்குச் செல்லத்தக்கதாகும்.
நீங்கள் திட்ட அனுமதியை எவ்வாறு பெற வேண்டும்?
திட்ட அனுமதிக்கு விண்ணப்பிக்க இரண்டு வகையான விண்ணப்ப படிவங்கள் உள்ளன. மனைப்பிரிவிற்கு படிவம் - "அ" மற்றும் மற்ற அனைத்து கட்டிட வளர்ச்சிகளுக்கு படிவம் - "ஆ" வை பயன்படுத்த வேண்டும். படிவம் "இ" என்பது விண்ணப்பதாரர் மற்றும் நில உரிமையாளரின் பொறுப்புறுதி மொழிச் சான்றாகும்.
மேற்படி விண்ணப்ப படிவத்தை, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், சென்னை மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களிலும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் யாவை?
படிவம் - "அ" மனைப் பிரிவிற்கானது. படிவம் - "ஆ" மற்றும் "இ" கட்டிட அனுமதிக்கானது. படிவம் - "ஆ" வை நன்கு பூர்த்தி செய்து அதில் மனுதாரர் மற்றும் பதிவு பெற்ற நிலஅளவையாளர் கையொப்பமிட்டு, சரிபார்ப்பு பட்டியலுடன் உரிய ஆவணங்கள், வரைபடங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
யாரிடம் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்?
சிறப்பு வகைக் கட்டிடங்கள் (தரைத்தளம் +3 தளங்கள் கொண்டவை), தொகுப்புக் கட்டிடங்கள் மற்றும் பல அடுக்கு மாடி கட்டிடத்திற்கான ( 4 தளங்களுக்கு மேல்) திட்ட அனுமதி பெற விழையும் விண்ணப்பங்களைச் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் நேரடியாக சமர்ப்பிக்கலாம். இவை தவிர மற்ற வளர்ச்சிக் கட்டிடங்கள், சாதாரண வகைக் கட்டிடங்கள் ஆகியவைகளுக்கான திட்ட அனுமதி பெற விழையும் விண்ணப்பங்களை சென்னை மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் ஆகிய இடங்களில், தங்கள் மனை அமையும் இடத்தைப் பொருத்து, சமர்ப்பிக்க வேண்டும்.
முழுமைத்திட்டம் / விரிவான வளர்ச்சித் திட்டத்தின்படி நிர்ணயிக்கப்பட்ட நிலஉபயோகம் பற்றிய விதி மற்றும் வளர்ச்சிக் கட்டுபாடு விதிகளின்படி தங்களின் விண்ணப்பம் பரிசீலனை செய்யப்படும். வளர்ச்சிக் கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்புடையதாக தங்கள் விண்ணப்பம் இருந்தால், திட்ட அனுமதி வழங்கப்படும், இல்லையெனில் திட்ட அனுமதி (உள்ளாட்சி மன்றம் / செ.பெ.வ.குழுமத்தால்) மறுக்கப்படும்.
மனை பார்வையிடப்படுமா?
கட்டிட அனுமதி ஆய்வாளரால்/நகர் திட்டமிடல் அலுவலரால்/சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் அலுவலரால் உங்களது மனை மற்ற மனைகளைப் போலவே விதிவிலக்கில்லாமல் பார்வையிடப்படும்.
திட்ட அனுமதி விண்ணப்பத்தில் முடிவு எடுக்க எவ்வளவு காலம் ஆகும்?
சில அசாதரணமான சூழ்நிலைகள் தவிர மற்ற அனைத்து விண்ணப்பங்களும் குடிமக்கள் சாசனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கால நிர்ணயித்தின்படி முடிவு செய்யப்படும்.
திட்ட அனுமதிப் பரிசீலனையின் முடிவினால் நீங்கள் பாதிக்கப்பட்டதாக கருதினால் உங்களுக்குள்ள உரிமை என்ன?
உங்களின் தீர்மானத்திற்கு உள்ளாட்சி நிறுவனத்தாலோ அல்லது சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தாலோ திட்ட அனுமதி மறுக்கப்பட்டால் நீங்கள் அரசிற்கு மேல் முறையீடு செய்யலாம்.
நீங்கள் திட்ட அனுமதிக்கு விண்ணப்பம் செய்யாமலே வளர்ச்சி மேற் கொண்டால் என்ன நடக்கும்?
நீங்கள் திட்ட அனுமதி பெறாமலேயே கட்டுமானத்தை மேற் கொண்டால் அது அங்கீகாரமற்ற வளர்ச்சியாகக் கருதப்படும். சட்ட விதிகளின்படி அங்கீகாரம் பெறாத கட்டிடத்தை இடிக்க முடியும் அல்லது பூட்டி முத்திரையிட்டு மூடி வைக்க முடியும்.
அங்கீகாரம் பெற்ற வளர்ச்சியில் விதிமீறல் இருப்பின், அம்மீறல்களுக்கு தனியாக விண்ணப்பம் செய்து உரிய ஆணை பெற வேண்டும். அந்நிலையில் விதிமீறல்களைத் தெளிவாக காட்டும் திருத்திய வரைபடம் சமர்ப்பிக்க வேண்டும். சாதாரணமாக திட்ட அனுமதி பெற விண்ணப்பம் சமர்ப்பித்தலில் உள்ள பரிசீலனை நடைமுறைகள் இதற்கும் செயல்படுத்தப்படும்.
நீங்கள் கட்டிட உரிமத்திற்கான கட்டணம் மற்றும் வளர்ச்சிக் கட்டணம் செலுத்த வேண்டுமா?
உங்களுடைய விண்ணப்பம் அங்கீகாரம் அளிக்கத் தகுதி உள்ளது என்ற நிலைவந்தவுடன் வளர்ச்சிக் கட்டணம் செலுத்த வேண்டியது பற்றிய கேட்புக் கடிதம் அனுப்பப்படும். உத்தேசித்துள்ள உபயோகம் மற்றும் தளங்களின் பரப்பளவிற்கு ஏற்றவாறு கட்டணங்களின் தொகை இருக்கும்.
மேம்பாட்டாளர் என்ற முறையில் உங்களின் கடமை என்ன?
எந்தவொரு வளர்ச்சிக்கும்/கட்டுமானத்திற்கும் திட்ட அனுமதி பெற வேண்டும். திட்ட அனுமதியில் தெரிவிக்கப்பட்டுள்ள கால வரம்பிற்குள் வளர்ச்சிப் பணிகளை முடிக்க வேண்டும்.
வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகள் தொடர்பான விளக்கங்கள் மற்றும் நில உபயோக விவரம் ஆகியவற்றை எங்கு நீங்கள் பெறலாம்?
எண்.1, காந்தி-இர்வின் சாலை, எழும்பூர், சென்னை-8 என்ற முகவரியில் இயங்கிவரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் அலுவலக வளாகத்தில் முதல் மாடியின் கிழக்கு பகுதியில் செயல்பட்டு வரும் ஆலோசனை மற்றும் கலந்தாய்வு மையத்தில் விளக்கங்கள் பெறலாம்.
ஆலோசனை மற்றும் கலந்தாய்வு மையத்தில் வழங்கப்படும் மற்ற வேலைகள் என்ன?
-
நில உபயோக மண்டலம் பற்றிய விளக்கங்கள் வாய் மொழியாகவும் எழுத்து மூலமாகவும் உடனுக்குடன் வழங்குதல்
-
அங்கீகரிக்கப்பட்ட மனை மற்றும் குடியிருப்புகளின் திட்ட அனுமதி பெற்ற வரைபட நகல் (இதற்கு அங்கீகார எண் பற்றிய விபரம் தெரிவிக்க வேண்டும். வரைப்படத்திற்கான கட்டணம் வரைபடத்தின் அளவிற்கு ஏற்றவாறு இருக்கும்)
-
வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகள் புத்தகம், திட்ட அனுமதி விண்ணப்பங்கள், சரிபார்ப்புப் படிவங்கள்
-
வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளின்படி தங்களின் வளர்ச்சித் திட்டம் ஏற்புடையாக உள்ளனவா என்பது பற்றிய விளக்கங்கள்.
-
வாகனம் நிறுத்தும் தளத்துடன் கூடிய சாதாரண வகைக் கட்டிடங்கள் சிறப்பு வகை மற்றும் தொகுப்புக் கட்டிடங்கள், பலமாடி அடுக்ககங்கள் கொண்ட கட்டிடங்கள் ஆகியவற்றிக்கான திட்ட அனுமதி விண்ணப்பங்கள் இம்மையத்தில் பெறப்பட்டு அனுமதிப்பதற்கான ஒப்புகை கடிதம் வழங்கப்படுகின்றன.
-
மற்ற விண்ணப்பங்கள் மற்றும் குழுமத்தின் பதிப்புகள்
-
வளர்ச்சிக் கட்டுப் பாட்டு விதிகளுக்கு ஏற்ப வளர்ச்சித் திட்டங்களைத் தயாரிக்க உரிய ஆலோசனைகளை வழங்குதல்.
வேறு கேள்விகள் ஏதேனும் இருந்தால்?
இக்குழுமத்தின் அலுவலர்கள் உங்களுக்கு உதவுதலில் பெருமகிழ்ச்சி அடைவர். எனவே அவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை பெறுவதில் தயக்கம் கொள்ள வேண்டாம்.