நில உபயோக மாற்றம்
1971-ம் ஆண்டின் தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்ட பிரிவு 32(4)-ன் கீழ் தற்போதைய நில உபயோகம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தற்போதைய முழுமைத் திட்டம் மற்றும் விரிவான வளர்ச்சி திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நில உபயோக மாற்றத்திற்கு ஏற்ற அணுகுபாதை கொண்ட மற்றும் சுற்றியுள்ள வளர்ச்சிக்கு ஏற்புடைய சுற்றுச் சூழலை பாதிக்காத தீர்மானம் கொண்ட நில உபயோக மாற்றம் விழையும் விண்ணப்பங்களை மட்டும் குழுமம் தனது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறது.
நில உபயோக மாற்ற விண்ணப்பத்தின் பரிசீலனையில் கீழ்காணும் நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றது.
-
நில உபயோக மாற்றம் விழையும் விண்ணப்பத்தினை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிறுவனத்திடம் சமர்பிக்க வேண்டும்.
-
உள்ளாட்சி நிறுவனத்தின் பரிந்துரையுடன் ஆய்வுக் கட்டணம் (ரூ. 30000/-) மற்றும் அறிவிக்கை கட்டணத்திற்கான (ரூ.35,000/-) வரைவோலைகளுடன் குறிப்பிட்ட வினாப் பட்டியலுக்கான விடைகளுடனும் பரிந்துரையுடனும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு விண்ணப்பத்தினை அனுப்பிட வேண்டும்.
(i) விளம்பரக் கட்டணம் (பத்து நில அளவை உட்பிரிவுகள் வரை) : ரூ. 30,000/- (ii) விளம்பரக் கட்டணம் பத்து உட்பிரிவுகளுக்கு மேற்பட்ட ஒவ்வொரு கூடுதல் நில அளவை உட்பிரிவுக்கும் : ரூ.1000/- (iii) நில உபயோகமாற்ற அறிவிக்கையை அரசிதழில் வெளியிடுவதற்கான கட்டணம் : ரூ. 5,000/- -
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அவ்விண்ணப்பத்தினைப் பெற்று பதிவு செய்து மற்றும் ஆரம்ப நிலை ஆய்வுப் பணி (நில உபயோக குறிப்புகள் அனுப்புதல்) மேற் கொள்ளப்படும்.
-
விண்ணப்பதாரருக்கு சம்பந்தப்பட்ட நிலத்தின் மீது உள்ள உரிமை பற்றிய நில ஆவணங்கள், பட்டா, சிட்டா, அடங்கல் பற்றிய சோதனை மற்றும் நிலச் சுற்று விவர வரைபடம் ஆகியவை குறித்து விரிவான ஆய்வு செய்யப்படும்.
-
விடுபட்ட ஆவணங்கள்/மற்றும் நில உபயோக மண்டல மாற்றத்திற்கான கூடுதல் ஆவணங்கள் தேவைப்பட்டால் விண்ணப்பதாரரிடம் கேட்டுப் பெறுதல்.
-
நில உபயோக மாற்றத்திற்கான அறிவிக்கையினை நாளிதழில் (தமிழ்/ஆங்கிலம்) பிரசுரிக்கப்பட்டு அது குறித்த ஆலோசனை/ஆட்சேபணை/முறையீடுகள் செய்ய 21 நாட்களுக்குள் இக்குழுமத்திற்கு தெரிவிக்கலாம் (நாளிதழில் பிரசுரிக்க குறைந்தபட்சம் 10 விண்ணப்பங்கள் சேர்ந்தால்தான் அறிவிக்கையின் மூலம் வெளியிடப்படும்).
-
நில உபயோக மாற்றம் குறித்த ஆலோசனை / ஆட்சேபணைகளைப் பொது மக்களிடம் அறிவிக்கையின் மூலம் பெறப்பட்டு, அதனை ஆய்வு செய்து தொழில் நுட்பக் குழு மற்றும் குழுமத்திற்கு சமர்ப்பித்தல்.
-
துணைத் திட்ட அமைப்பாளர் நில உபயோக மாற்ற கோரும் நிலத்தினை நேரடியாக ஆய்வு செய்து அது பற்றிய வரைபடம் மற்றும் குறிப்புகள் சமர்ப்பித்தல்.
-
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னைப் பெருநகர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் போன்ற அரசு நிறுவனங்களிடம் தேவைப்பட்டால் மட்டும் சம்பந்தப்பட்ட நில உபயோக மாற்றம் பற்றிய தீர்மானத்திற்கான இசைவு பெறுதல்.
-
தொழில் நுட்பக் குழுவின் பரிசீலனைக்குக் குறிப்பு வைத்தல்.
-
நில உபயோக மாற்றம் தொடர்பான வரைவு குறிப்பினை தொழில் நுட்பக் குழுவின் பரிந்துரையுடன் குழுமக் கூட்டத்தின் ஒப்புதலுக்கு வைத்தல்.
-
குழுமத்தின் ஒப்புதல் பெற்றபின், அந்த நில உபயோக மாற்றத்தினை தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடுதல்.
-
சட்ட விதிகளின்படி அறிவிக்கையினை மீண்டும் பிரகடனப்படுத்துதல்.