இரும்பு மற்றும் எஃகு சந்தை, சாத்தாங்காடு

இரும்பு மற்றும் எஃகு வர்த்தகத்தின் முக்கிய மையமாக சென்னை உள்ளது.மேலும் இது தென்னிந்தியாவின் முழுமைக்கும் மூலச் சந்தையாகவும் செயல்படுகிறது. சென்னையில் அனைத்து வர்த்தக பிரிவுகளின் வளர்ச்சி விகிதம் மிக உயர்ந்து காணப்படுகிறது. ஆனால் சென்னையில் அமைந்துள்ள இரும்பு மற்றும் எஃகு வணிகம் போதிய இடமும், திறம்பட நடத்திட வசதிகளும், சந்தையின் வளர்ச்சி வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் அமைக்கப்படவில்லை என்றே தெரிகின்றது. வர்த்தகச் செரிவு மிக்க பகுதிகள், இடர்பாடான இடங்கள், குறுகிய சாலையில் கனரக போக்குவரத்து, போக்குவரத்து தடைகள், ஓசை மிகுந்த சுகாதாரமற்ற சூழல் ஆகியவை நகர் வளர்ச்சியில் மெத்தனமான மற்றும் சிக்கனமில்லா நிலைமையை ஏற்படுத்துகின்றது.
தமிழ்நாடு அரசு, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை வெளியிட்ட அரசாணை எண்.62, நாள் 23.2.1999 சாத்தாங்காடு இரும்பு மற்றும் எஃகு சந்தையை 1.3.99 தேதி முதல் "தெரிந்தெடுக்கப்பட்ட சந்தை பகுதி" என பிரகடனப்படுத்தியது.
இந்த இடமானது 203 ஏக்கர் நிலப்பரப்பில் திருவொற்றியூருக்கு அருகாமையிலும் சென்னை நகரத்தை ஒட்டியும், சென்னை துறைமுகத்திற்கும், திருவொற்றியூர் தொடர்வண்டி நிலையத்திற்கும் எளிதில் செல்லக் கூடிய வகையில் அமைந்துள்ளது.
நேர்த்தியான உள்கட்டமைப்பு, வசதிகள் மற்றும் சேவைகள் வணிகர்களின் தேவைக்கேற்ப நல்ல முறையில் வணிகம் செய்ய வளர்ச்சிக்கான கூறுகளை முழு அளவில் வெளிக்கொணரும் வண்ணம் இச்சந்தை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சந்தை இந்தியாவின் அதிநவீன சந்தையாக, அறிவியல் பூர்வமாக திட்டமிடப்பட்டு, 850 மனைகளை உள்ளடக்கிய இம்மனைப்பிரிவில் 650 மனைகள் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இச்சந்தையில் 48 ஏக்கர் நிலம் மொத்தமாக இந்திய எஃகு நிறுவனம் மற்றும் வி.எஸ்.பி (பெரிய அளவில் இருப்பு வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு) ஒதுக்கீடு செய்யப்பட்டது. சுமார் 1 ஏக்கர் நிலம் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்காக எச்.பி.சி. மற்றும் ஐ.ஓ.சி. நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.